Thursday, 23 April 2015

பஞ்சிரி சமையல்

பஞ்சிரி சமையல்

ன்னென்ன தேவை?

கோதுமை மாவு – 1/4 கிலோ,
நெய் – 1/4 கிலோ,
உலர்ந்த திராட்சை – 25 கிராம்,
பாதாம் – 25 கிராம்,
உலர்ந்த தாமரை விதை (மக்னா) – 20 கிராம் (பெரிய கடைகளில் கிடைக்கும்),
பொடித்த சர்க்கரை – 1/2 கிலோ,
சமையல் கோந்து – 25 கிராம்,
தர்பூசணி விதை – 25 கிராம்,
கிர்ணி விதை – 25 கிராம்,
சுக்குத் தூள் – 1 சிட்டிகை,
ஓமம் – 1 சிட்டிகை,
பூசணி விதை – 25 கிராம்.

எப்படிச் செய்வது?
ஒரு பெரிய வாயகன்ற கடாயில் சிறிது நெய்யை ஊற்றி, சூடாக்கி நன்கு சூடாக இருக்கும் போது கோந்தை கொஞ்சம் கொஞ்சமாகப் பொரித்து எடுக்கவும். கோந்து பொரிக்கும் போது புஸுபுஸு என்று வரும். அப்போது தீயைக் குறைத்துக் கொள்ளவும். பின் விதைகள், நட்ஸை தனித்தனியாக பொரித்து எடுத்து வைக்கவும். இப்போது மீதி உள்ள நெய்யை கடாயில் சேர்த்து சூடாக்கி ஓமம், சுக்குத் தூள் சேர்த்து வதக்கி இத்துடன் கோதுமை மாவு சேர்த்து கைவிடாமல் கிளறுங்கள். நன்கு சிவக்க வறுக்க வேண்டும்.
வறுபட்டதும் இறக்கி, பொடித்த சர்க்கரை, கோந்து தூள், வறுத்த பருப்புகள், விதைகள், உலர்ந்த திராட்சை சேர்த்து கலந்து சூடாக இருக்கும் போதே நெய் தடவிய சிறுசிறு கப் அல்லது கிண்ணங்களில் 2 அல்லது 3 டீஸ்பூன் போட்டு அழுத்தி அப்படியே வைத்து பின் பரிமாறலாம். சிறிது நேரம் கழித்து தட்டில் அலங்கரித்தும் பரிமாறலாம். சத்தான பஞ்சிரி பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கும், குறிப்பாக கர்ப்பிணிகளுக்கும், குழந்தை பெற்ற பெண்களுக்கும் ஏற்றது

 

No comments: