Thursday, 9 April 2015

என்றும் இளமை தரும் கடுக்காய் :-

என்றும் இளமை தரும் கடுக்காய் :-

ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று திருமூலர் குறிப்பிடுகிறார். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலாய் கருது என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.
பெற்ற தாயானவள் தன் பிள்ளைமேல் உள்ள பாச மிகுதியால், கண்ட உணவுகளையும் வகை வகையாய் செய்து கொடுத்து அவன் வயிற்றைக் கெடுத்துவிடுவாள். ஆனால் கடுக்காயோ வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது.
கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும்.
துவர்ப்புக்கும் வாயுவுக்கும் ஆகாது. ஆனால் வாழைப்பூவை கடலைப்பருப்பு சேர்த்துத்தான் பொரியல் செய்து சாப்பிடு கிறோம். கடலைப்பருப்பு வாயுப் பதார்த்தம். பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?
அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவை யான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம்.
கடுக்காயை மருந்தாக்குவது எப்படி?
கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். தரமான கடுக்காயை வாங்கி வந்து உடைத்து, உள்ளே இருக்கும் பருப்பை எடுத்துவிட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கை யைப் பெறலாம்.
கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்
கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய். கடுக்காயை உணவாய் தினசரி சாப்பிட்டு வாருங்கள். உங்களை எந்த நோயும் அணுகாது.
பின் வரும் சித்தர் பாடலைக் கவனியுங்கள்.
"காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே.
காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வரப் பழகிக் கொள்ளுங்கள். இதனால் முன் சொன்ன அனைத்து நோய்களும் உங்களை அண்டாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
தென்னாட்டவருக்கு திரிபலா...
திரிபலா என்பது கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றும் சம அளவு கலந்த மருந்தாகும். இதனை எவர் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். குறிப்பாக ஆங்கில மருந்துகள் நிறைய உட்கொள்பவர்கள், இம்மருந்தினை காலை- இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, ஆங்கில மருந்துகளால் உண்டாகும் பக்க விளைவுகளைக் குறைத்துக் கொள்ளலாம். மேலும் சர்க்கரை நோய்க்கு இணை மருந்தாய் பயன்படுத்த லாம்.
உடல் வலிமை பெற...
நூறு கிராம் கடுக்காய், சிலாசத்து பற்பம் 50 கிராம்- இரண்டையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவு காலை- இரவு சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் தேறும்; நரம்புகள் முறுக்கேறும்.
பல் நோய்கள் தீர...
கடுக்காய், கொட்டைப்பாக்கு, படிகாரம் ஆகிய மூன்றையும் வகைக்கு நூறு கிராம் எடுத்து ஒன்றாகத் தூள் செய்து கொள்ளவும். இதில் பல் துலக்கி வர அனைத்து பல் வியாதிகளும் தீரும்.
மூல எரிச்சல் தீர...
கடுக்காய்த் தூளை நீரிலிட்டு கொதிக்க வைத்து ஆற வைத்து, அந்த நீரால் ஆசன வாயைக் கழுவி வர மூல எரிச்சல், புண் ஆகியன ஆறும்.
எனவே, கடுக்காய் உங்கள் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷ மாகும். கடுக்காய் திருமூலரின் ஆசி பெற்றது. நாமும் அதைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், இந்த உடல் பெற்ற உபாயம் அறிவோம். நல்லன செய்து நலம் பல பெறுவோம். கடுக் காயைக் கருத்தில் வையுங்கள். திருமூலர் ஆசி உங்களுக்கு எப்பொழுதும் உண்டு. வாழ்க வளமுடன்!

No comments: