Tuesday, 15 September 2015

கோதுமைமாவு குழிப்பணியாரம்

கோதுமைமாவு குழிப்பணியாரம்

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – ஒரு கப்
உருளைக்கிழங்கு – 1
பெரிய வெங்காயம் – 1
பட்டாணி – கால் கப்
மிளகாய்தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை:
* உருளைக்கிழங்கையும் பட்டாணியையும் வேகவைக்கவும்.
* உருளைக்கிழங்கை தோல் உரித்து, வெங்காயம், மிளகாய்தூள், சிறிது உப்பு சேர்த்துப் பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டவும்.
* கோதுமை மாவில் உப்புப் போட்டுக் கரைத்துக் கொள்ளவும்.
* உருட்டி வைத்துள்ள மசாலா உருண்டைகளை, கோதுமை மாவில் தோய்த்து, குழிப்பணியாரக் கல்லில் எண்ணெய் விட்டு, போட்டு, திருப்பியதும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுக்க வேண்டும்.

Wednesday, 2 September 2015

அழகுக்கு மருந்தாகும் சோற்று கற்றாழை - இயற்கை மருத்துவம்

அழகுக்கு மருந்தாகும் சோற்று கற்றாழை - இயற்கை மருத்துவம் 

தமிழர் பாரம்பரியத்தில் மண்ணில் விளையும் புல், பூண்டுக்குள் உள்ள மருத்துவ குணங்களைக் கண்டறிந்து வாழ்க்கை முழுக்கவும் பயன்படுத்தியுள்ளனர். இயற்கை மருத்துவ முறைகளால் நூற்றாண்டுகளைத் தாண்டியும் ஆரோக்கியமாக வாழ்ந்துள்ளனர். எந்த பக்கவிளைவுகளும் இன்றி, இன்றளவும் அவற்றை மருந்தாக பயன்படுத்த முடியும். சுற்றுச்சூழல் சீர்கேட்டினால் உடல் அழகைக் குறைக்கும் மாசுகளில் இருந்து அழகை பாதுகாக்க கை கொடுப்பதில் கற்றாழைக்கு முக்கிய இடம் உள்ளது என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.
கற்றாழையின் மருத்துவ குணங்கள் மக்கள் மத்தியில் பரவி வருவதால், கிராமங்கள் மட்டுமின்றி நகர்ப்புறத்திலும் கிடைக்கிறது கற்றாழை. சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, பேய்க் கற்றாழை, கருங்கற்றாழை, செங்கற்றாழை எனப் பல வகை இருந்தாலும் இதில் மருத்துவராக செயல்படுவது சோற்றுக் கற்றாழை மட்டுமே.
கற்றாழை உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் அழகுசாதன பொருள் உற்பத்தியிலும், மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சோற்றுக் கற்றாழை மடல்களை பிளந்த நுங்குச் சுளை போல உள்ள சதைப்பகுதியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி நல்ல தண்ணீரில் 7 - 10 முறை நன்றாகக் கழுவி எடுத்துக் கொண்டு மருந்தாகப் பயன்படுத்த வேண்டும். கற்றாழையைக் கையால் தொட்டால் வாய் கசக்கும் என்பார்கள். கழுவிச் சுத்தம் செய்தால் கற்றாழையின் வெறுட்டல் குணமும், கசப்பும் குறைந்துவிடும்.
கூந்தல் வளர: சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையின் சதைப் பகுதியைச் சேகரித்து, ஒரு பாத்திரத்தில் வைத்து சிறிது படிகாரத் தூளைத் தூவி வைத்தால், சோற்றுப் பகுதி யில் உள்ள சதையின் நீர் பிரி ந்து விடும். இந்த நீருக்குச் சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண் ணெய் கலந்து நீர் சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளரும். நல்ல தூக்கம் வரும்.
கண்களில் அடிபட்டால்: கண்களில் அடிபட்டாலோ இதர காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால், கற்றாழைச் சோற்றை வைத்துக் கட்டி இரவு தூங்கினால் வேதனை குறையும்.
குளிர்ச்சி தரும் குளியலுக்கு: மூலிகைக் குளியல் எண்ணெய் தயாரிக்க சோற்றுக் கற்றாழை சோற்றுப் பகுதியை எடுத்து, அதில் நல்லெண்ணெய் சேர்த்து கடும் வெயிலில் 30 தினங்கள் வைத்து எடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். எண்ணெய் பசுமை நிறமாக மாறிவிடும். இதில் தேவையான வாசனையைக் கலந்து வைத்துக் கொண்டு குளியலுக்குப் பயன்படுத்தினால் குளிர்ச்சி தரும் எண்ணெய் ஆகும்.
முகத்திலுள்ள கரும்புள்ளிகள்: தழும்புகள், வெயில் பாதிப்புகள், உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாற்றை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும். ஆண்கள் சவரம் செய்யும் பொழுது ஏற்படும் கீறல்கள் காயங்களுக்கும் உடனடி நிவாரணம் பெற கற்றாழைச் சாறை பயன்படுத்தலாம். தீக்காயங்களுக்கும் உடனடி மருத்துவர் கற்றாழைச் சாறுதான். இதன் சாறை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து காலையில் வெந்நீரால் கழுவ முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவு பெறும்.

அடிக்கடி ஏப்பம் வருகிறதா? இதோ சரிசெய்ய டிப்ஸ்

அடிக்கடி ஏப்பம் வருகிறதா? இதோ சரிசெய்ய டிப்ஸ்
உடலில் காற்றின் அளவு அதிகமாக இருந்தால் தான் ஏப்பம் வரும். அதுவும் காற்றானது இரைப்பையில் இருந்தால் அவை ஏப்பமாக வெளியேறும்.
அதுவே இரைப்பையைத் தாண்டி குடலை அடைந்துவிட்டால், வாய்வாக மலவாயில் ஊடாக வெளியேறும்.
ஆனால் சிலருக்கு தொடர்ச்சியாக ஏப்பம் வந்து கொண்டே இருக்கும். அலுவலகத்தில் இருக்கும் போது இப்படி அடிக்கடி ஏப்பம் வந்தால், அது மற்றவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி, நம்மீது கெட்ட அபிப்ராயத்தை ஏற்படுத்திவிடும்.
இதோ அதனை சரிசெய்வதற்கான டிப்ஸ்
குளிர்ச்சியான தண்ணீரை குடித்து வந்தால், ஏப்பத்தில் இருந்து விடுபடலாம்.
அமிலத்தன்மை உள்ள பானங்களான சோடா போன்றவற்றை ஒரு சிப் குடித்தாலும், அடிக்கடி ஏப்பம் வருவதைத் தடுக்கலாம்.
அடிக்கடி ஏப்பம் வரும் போது, ஒரு கப் புதினா டீ குடித்தால், ஏப்பப் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடலாம்.
ப்ளாக் டீ கூட ஏப்பத்திற்கு நல்ல நிவாரணியாக விளக்கும். அதற்கு ஒரு கப் வெதுவெதுப்பான ப்ளாக் டீயை குடியுங்கள்.
சோம்புவை தினமும் சிறிது சாப்பிட்டு வந்தால், அடிக்கடி ஏப்பம் ஏற்படாமல் இருக்கும். இந்த முறையால் உடனே ஏப்பம் நிற்காவிட்டாலும், தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ஏப்ப பிரச்சனையில் இருந்து முழுமையாக விடுபடலாம்.
ஒரு கப் ஏலக்காய் டீ குடித்தால், செரிமான பிரச்சனை நீங்கி, அடிக்கடி ஏப்பம் வருவது உடனே நின்றுவிடும்.
ஒரு துண்டு இஞ்சியை வாயில் போட்டு மென்றாலோ அல்லது இஞ்சி டீ குடித்தாலோ, தொடர் ஏப்பம் வராமல் இருக்கும்.
சிட்ரஸ் பழங்கள் கூட ஏப்ப பிரச்சனைக்கு நல்ல நிவாரணத்தைக் கொடுக்கும். அதிலும் ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையை சாப்பிட்டால், அது வயிற்றில் உள்ள காற்று உடனே வெளியேற்றி, அடிக்கடி ஏப்பம் வருவதைத் தடுக்கும்.
ஒரு கப் சர்க்கரை சேர்க்காத எலுமிச்சை ஜூஸ் குடியுங்கள். இதனால் செரிமான பிரச்சனையுடன், ஏப்ப பிரச்சனையும் குணமாகும்.

காய்கறி சொதி

காய்கறி சொதி
"சொதி" அல்லது "சொதி குழம்பு" என்றழைக்கப்படும் இநத "தேங்காய்ப்பால் குழம்பு" திருநெல்வேலி சைவ வீடுகளில் பிரபலமானது. விருந்துகளில் இது நிச்சயமாக இடம் பெறும். குறிப்பாக, திருமணமாகி மாப்பிள்ளை மறு வீடு வரும் பொழுது, இந்தக் குழம்பு கண்டிப்பாக இருக்கும்.
இதில் முருங்கைக்காய், கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ் போன்ற பலவிதமான காய்கறிகளைச் சேர்த்துச் செய்வார்கள். செய்யும் முறை வீட்டிற்கு வீடு சற்று மாறு படும். அடிப்படையில், காய்கறிகளை தேங்காய்ப்பாலில் வேக வைத்து, பருப்பு சேர்த்து செய்யும் குழம்பு இது.
செய்முறை:
தேவையானப்பொருட்கள்:
தேங்காய் (பெரியது) - 1
உருளைக்கிழங்கு - 2
கேரட் - 1
பீன்ஸ் - 5 அல்லது 6
சாம்பார் வெங்காயம் - 10
பூண்டுப்பற்கள் - 10
எலுமிச்சம் பழச்சாறு - 1 டேபிள்ஸ்பூன்
பயத்தம் பருப்பு - 1/4 கப்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
இஞ்சி - 2 அங்குல நீளத்துண்டு
பச்சை மிளகாய் (சிறியது) - 4 முதல் 5 வரை
எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
பச்சை அல்லது கறுப்பு திராட்சை - ஒரு கைப்பிடி (விருப்பமானால்)
செய்முறை:
காய்கறிகளை நன்றாகக் கழுவிக் கொள்ளவும். உருளைக்கிழங்கு மற்றும் கேரட்டின் தோலை சீவி விட்டு நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பீன்ஸை 2 அங்குல துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
வெங்காயம் மற்றும் பூண்டின் தோலை உரித்து விட்டு, முழுதாகவே வைத்துக் கொள்ளவும். இஞ்சியின் தோலை சீவி விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பயத்தம் பருப்பை வெறும் வாணலியில் போட்டு சிவக்க வறுத்து, தேவையான தண்ணீரை விட்டு வேக வைத்தெடுக்கவும்.
தேங்காயைத்துருவி கெட்டியான பாலை எடுக்கவும். ஒரு கப் திக்கான பால் கிடைக்கும். அதைத் தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர் சிறிது தண்ணீரை தேங்காயுடன் சேர்த்து அரைத்து, இரண்டாம் பாலையும் பிழிந்து எடுக்கவும். மேலும் சிறிது தண்ணீரைச் சேர்த்து மூன்றாம் பாலையும் பிழிந்தெடுக்கவும். இரண்டாவது, மூன்றாவதாக எடுத்தப்பாலை ஒன்றாகச் சேர்க்கவும். மூன்று கப் அளவிற்கு இந்தப் பால் இருக்கும். இல்லையென்றால் சிறிது நீரைச் சேர்த்து 3 கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு பச்சை மிளகாயையும், இஞ்சித்துண்டுகளையும் வதக்கி எடுத்து, விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
அடி கனமான வாணலி அல்லது பாத்திரத்தை அடுப்பிலேற்றி எண்ணை விடவும். எண்ணை சூடானதும் வெங்காயத்தைப் போட்டு சில வினாடிகள் வதக்கவும். பூண்டையும் சேர்த்து மேலும் சில வினாடிகள் வதக்கவும். பின்னர் காய்கறிகளைச் சேர்த்து சற்று வதக்கி, அத்துடன் இரண்டாம்/மூன்றாம் முறை எடுத்து வைத்துள்ள தேங்காய்ப்பாலைச் சேர்க்கவும். உப்பு, மஞ்சள் தூளைச் சேர்த்துக் கிளறி விட்டு, மிதமான தீயில் வேக விடவும்.
காய்கறிகள் வெந்ததும், அரைத்து வைத்துள்ள மிளகாய்/இஞ்சி விழுதைச் சேர்த்துக் கிளறவும். பின்னர் அத்துடன் வேக வைத்துள்ளப் பருப்பையும் சேர்த்துக் கிளறி கொதிக்க விடவும். குழம்பு நன்றாகக் கொதித்ததும், அடுப்பை சிறு தீயில் வைத்து, திக்கான தேங்காய்ப்பாலைச் சேர்த்துக் கிளறி, ஓரிரு நிமிடங்கள் அடுப்பில் வைத்திருந்து விட்டு இறக்கி வைக்கவும்.
5 அல்லது 10 நிமிடங்கள் கழித்து, எலுமிச்சம் பழச்சாற்றைச் சேர்த்துக் கலக்கி விடவும்.
பச்சை திராட்சைப் பழங்களையும் சேர்த்து கிளறி, இஞ்சி துவையல், உருளைக்கிழங்கு சிப்ஸ் அல்லது காரமான உருளைக் கிழங்கு கறியுடன் பரிமாறவும்.
சாதரணமாக இதை சூடான சாதத்துடன் பரிமாறுவார்கள். ஆனால் இடியாப்பம் மற்றும் ஆப்பத்துடன் சேர்த்து சாப்பிடவும் நன்றாக இருக்கும்.
கவனிக்க: ஒரு பெரிய தேங்காயில் ஒரு கப் திக்கான பால் கிடைக்கும். காய் சிறியதாக இருந்தால் மேலும் ஒரு மூடி தேங்காயைச் சேர்த்துக் கொள்ளவும். கடைகளில் கிடைக்கும் தேங்காய்ப்பாலையும் உபயோகிக்கலாம். அப்படி செய்யும் பொழுது, ஓரிரு டேபிள்ஸ்பூன் திக்கான பாலில் தேவையான நீரைச் சேர்த்து கலந்து, அதில் காய்களை வேக வைக்கவும்